20-06-2026
20-06-2026

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால்...” - திருமாவளவன் கருத்து

சென்னை: “இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கூடுதல் தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.திருமாவளவன் வெளியிட்ட காணொலிப் பதிவில், “திமுக கூட்டணி வேட்பாளர்களும், விசிக சார்பில் போட்டியிட்ட 8 வேட்பாளர்களும் உறுதியாக வெல்வார்கள் என்று நம்புகிறேன்.கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில் சில விசிக பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்ற தகவல்கள் எனக்கு வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை திரட்டி வருகிறோம். அதே நேரத்தில் இந்த தேர்தலில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சி தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்கள்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறப்போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில் பெண்கள், இளைஞர்களுக்கான பல திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.மேலும், இக்கூட்டணி ஒரு கொள்கை பிடிப்புள்ள கூட்டணி. இந்த பொறுப்புணர்வோடு இக்கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விசிக பெரும் முயற்சி எடுத்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சீர்குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு முயற்சிகளை பலரும் எடுத்தனர். அவர்களின் இலக்கு விசிகதான். எப்படியாவது திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைத்தனர். என் மூலமாக திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திட்டமிட்டனர்.தற்காலிக லாபத்துக்காக ஒரு முடிவை எடுக்க நான் விரும்பவில்லை. எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், ஆசை காட்டியும் திருமாவளவன் உறுதியாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு யாரும் என்னை பாராட்டவில்லை. இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கும். அதை நாம் விரும்பவில்லை.திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நாம் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. அதற்காக நாம் முரண்டுபிடித்து, இழுபறி நிலையை உருவாக்கவில்லை. கூட்டணியில் சங்கடமான சூழலை உருவாக்க விரும்பவில்லை. கூட்டணியை பலவீனப்படுத்த கூடாது என்று நானே முடிவெடுத்தேன். மேலோட்டமாக பார்த்தால் அது ஏமாளித்தனம் போல தெரியும். பொறுப்புணர்வோடு ஆய்வு செய்தால் நம் பெருந்தன்மையை புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், அதனையும் பலர் இங்கு கொச்சைப்படுத்துகிறார்கள்.எக்ஸிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என சொல்லியுள்ளனர். சிலர் அதிமுக - பாஜக அணி வெற்றி பெறும் என சொல்லியுள்ளனர். நாம் கருத்துக் கணிப்புகளை நம்ப தேவையில்லை. எப்படி கணக்கு போட்டாலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டிபோட்டு பிரிக்கிறார்கள்.திமுக, அதிமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வாக்குகளை அவ்வப்போது வந்த தலைவர்கள் அறுவடை செய்தனர். இப்போது திமுகவை அதிமுக, விஜய், சீமான் ஆகியோர் எதிர்த்து வாக்குகளை பிரித்தனர்.திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால், தனித்த சக்தியாக திமுக அதிமுக அணிகளை பின்னுக்கும் தள்ளும் வலிமையை விஜய் பெறவில்லை. எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.விசிக 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முடிவு எதுவாக இருந்தாலும் நமது அரசியல் களம் நீர்த்துப் போகாது. நம் பயணம் வேகம் பெறும், தீவிரமடையும்” என்று திருமாவளவன் கூறினார்.

+